×

கால்நடை பராமரிப்புக்கு இயற்கை வழிமுறைகள்

வலங்கைமான், செப். 7: கால்நடை பராமரிப்புக்கு இயற்கை வழிமுறைகளை கால்நடை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைகளுக்கு சினை நிற்காததற்கு சத்து பற்றாக்குறை, பூச்சிக்கொல்லி நஞ்சு தெளித்த வைக்கோல், ரசாயன உப்பு போட்டு வளர்த்த சோளத்தட்டை போன்றவையே முக்கிய காரணமாகும்.

இக்குறைகளை போக்க முளைகட்டிய நாட்டுக் கம்பு, சுண்டல் கடலை தினசரி 1 கிலோ வரை 10 நாட்கள் கொடுக்க வேண்டும். கற்றாழை சோற்றை தினசரி 1 மடல் அளவு 4-5 நாட்கள் கொடுக்க வேண்டும். துவர்ப்பு கொண்ட பட்டை மாதுளம் பழம் தினசரி 1-2 அளவு 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். பிறகு குடல் புழுவை நீக்க கசப்பு உணவை, வேப்ப எண்ணெய்-100 மி.லி., 1-3 நாட்கள் கொடுக்க வேண்டும். இதற்குப் பின் சினைக்கு விட்டால் சினை நிற்கும். சினைக்கு விட்டு வந்த பிறகு கால்நடையை குளிப்பாட்ட வேண்டும். இத்தகைய முறைகளை பின்பற்றுவதன் மூலம் நீண்ட நாட்கள் சினை பிடிக்காத மாடுகள் கூட சினை பிடித்துள்ளது.

கால்நடைகளுக்கு இயற்கை வழியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகை பொருட்களை கொண்டு மூலிகை கலவை தயாரித்து வழங்கலாம். வேம்பு இலை-300 கிராம், அரப்பு (உசில இலை)-300 கிராம், சிறியாநங்கை இலை-50 கிராம், அமுக்கிரான் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)-300 கிராம், சீந்தல் கொடி இலை-50 கிராம் ஆகிய மூலிகைகளை தனித்தனியாக நிழலில் காய வைத்து பின் இடித்து தூளாக்கி கலக்க வேண்டும். இவற்றை தினசரி நெருப்பு பெட்டி அளவு (20 கிராம்) தாழி நீரில் போட்டும், தவிட்டுடன் கலந்தும் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூலிகை கலவையை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை இயற்கை முறையில் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இம்முறையை பல விவசாயிகள் பயன்படுத்தி நல்ல பலன் பெற்றுள்ளனர். இத்தகவலை கால்நடை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கால்நடை பராமரிப்புக்கு இயற்கை வழிமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Dinakaran ,
× RELATED வலங்கைமானில் ஆசிரியையிடம் செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது